Monday, July 2, 2012

அமாவாசையின் சிறப்பு

அமாவாசையின் சிறப்பு;
-------------------------------------
அமாவாசை அல்லது அமைவாதல் என்பது சந்திரன் தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாளாகும். வானியலின்படி, பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் வரும் நாளே அமைவாதை யாகும். சூரியனுடைய ஒளி சந்திரனில் பட்டுத் தெறிப்பதனாலேயே புவியிலிருந்து பார்ப்போருக்குச் சந்திரன் தெரிகிறது. ஆனால் சந்திரன் புவிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கும்போது சூரிய ஒளி புவியிலிருந்து பார்ப்போருக்குத் தெரியாத சந்திரனின் பின்பகுதியில் விழுவதால் அது நமக்குத் தெரிவதில்லை. இந்த நிகழ்வின்போதே சில தருணங்களில் சந்திரன் சூரியனை மறைப்பதனால் சூரிய கிரகணமும் ஏற்படுகிறது.
சந்திரமானம் எனப்படும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் அமைவாதை நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.

ஏழைகளுக்கு தானம்.....
பிதுர்களுக்கு திதி கொடுப்பதை ஏதோ செய்யக் கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க சொல்லியுள்ளனர்.
முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந் நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.

மாதுர்க்காரகன் (சந்திரன்), பிதுர்க்காரகன் (சூரியன்) ஆகிய இருவரும் ஒரே நேர்க்கோட்டில் இணையக் கூடிய நாளே அமாவாசை என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதனை அறிவியலும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இதேபோல் கிரகங்கள் என்று எடுத்துக் கொண்டாலும் சூரியன் ஆதிக்கமுள்ள கிரகங்கள் ஒரு அணியாகவும், சந்திரன் ஆதிக்கத்திற்கு உட்பட்ட கிரகங்கள் மற்றொரு அணியாகவும் ஜோதிட சாஸ்திரம் பிரித்துள்ளது.

கும்பம், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய 6 வீடுகளும் சந்திரனுடையது என்றும் சிம்மம் முதல் மகரம் வரையுள்ள 6 வீடுகள் சூரியனுடையது என பழங்கால ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இந்த இரு வேறு சக்திகளும் (சூரியன், சந்திரன்) ஒன்றாக இணையக் கூடிய நாளே அமாவாசையாக கொள்ளப்படுகிறது. எல்லா திதியிலும், ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் (வலுவிழப்பது) அடையும். ஆனால் அமாவாசை தினத்தன்று எந்தக் கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை.

இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விடயங்கள் மேற்கொண்டால் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய முடியும். மருந்து உண்ணுதல், நோயாளிகள் குளித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அமாவாசை திதியன்று துவங்கலாம் என சித்த நூல்கள் கூறுகின்றன.

எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.

சங்க காலத்திலும் இதுபோன்ற விடயங்களும் நடைமுறையில் இருந்துள்ளது. முன்னோருக்கு திதி செய்வது, தர்ப்பணம், ஆற்றில் புனித நீராடுவது போன்றவை அமாவாசை தினத்தில் மேற்கொள்ளப்பட்டதை சங்க கால நூல்களும் உறுதி செய்துள்ளன.

எனவே, ராகு-கேது பரிகாரம் மட்டுமல்லாது, மற்ற வகைப் பரிகாரங்களும் செய்வதற்கு அமாவாசை திதி ஏற்றதாகும்

-பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்ரமணியன்

No comments: