Monday, July 2, 2012

ரத்தக் கசிவை நிறுத்தும் செயற்கை ரத்த அணுக்கள்!

ரத்தக் கசிவை நிறுத்தும் செயற்கை ரத்த அணுக்கள்!

விபத்துகளால் பாதிக்கப்படுபவர்கள் சந்திக்கும் முதல் மற்றும் மிகவும் ஆபத்தான பிரச்சினை வேகமான ரத்தக் கசிவுதான். இந்த ரத்தக் கசிவை உடனே நிறுத்தாவிட்டால், அதிகமான ரத்த இழப்பு ஏற்பட்டு அது உயிருக்கே ஆபத்தாய் முடிந்து விடும்.

இதேபோன்ற ஒரு சூழலைத்தான் காயம் அடையும் ராணுவ வீரர்களும், அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளும் சந்திக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு ஒரு முழுமையான தீர்வு என்றால் அது ரத்தக் கசிவை உடனே நிறுத்துவதுதான்.

ரத்தக் கசிவை உடனே நிறுத்த வேண்டுமானால் ரத்தம் கட்டியாக வேண்டும். அதற்கு `ப்ளேட்லெட்' எனப்படும் ஒரு வகை ரத்த அணுக்கள் அவசியம். தற்போதுள்ள மருத்துவ முறையில், இயற்கையான ரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ப்ளேட்லெட் அணுக்களைக் கொண்டு ரத்தத்தை கட்டியாக்கி ரத்தக்கசிவை நிறுத்துகிறார்கள்.

ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது, ரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ப்ளேட் லெட்களின் வாழும் காலம் (ஷெல்ப் லைப்) மிகமிக குறைவு. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஒரே வழிதான் இருக்கிறது. அது, செயற்கை ப்ளேட் லெட் அணுக்களை உருவாக்குவது.

கடந்த 100 வருடங் களாக, உலகின் பல சோதனைக்கூடங்கள் இயற்கையான ப்ளேட்லெட் அணுக் களின் அளவு, வடிவம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றை கொண்டிருக்கும் செயற்கை ப்ளேட்லெட்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இதுவரையில் யாரும் அந்த முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை.

உலகில் முதல் முறையாக, இயற்கையான ப்ளேட்லெட்களை போன்ற அளவு, வடிவம் மற்றும் செயல்பாடு கொண்ட செயற்கை ப்ளேட்லெட்களை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள். ரத்தத்தை கட்டியாக்கி ரத்தக் கசிவை தடுக்கும் திறனுள்ள இந்த செயற்கை ப்ளேட் லெட்கள், மேலும் பல விந்தைகளையும் செய்கின்றன என்கிறார் வேதி யியல் பொறியாளர் நிஷித் தோஷி.

உதாரணமாக, உடலில் சேதமடைந்த ரத்த நாளங்களை இனம்கண்டு சொல்வது அல்லது ரத்த நாளங்களில் ஏற்படும் ரத்த கட்டுகளை உடைக்கும் திறனுள்ள மருந்துகளை தாங்கிச் சென்று, ரத்தக் கட்டுகளை உடைத்து ரத்த ஓட்டத்தை சீராக்குவது போன்றவை.

அது சரி, கடந்த நூறு வருடங்களாக சாத்தியப்படாத செயற்கை ப்ளேட்லெட் உற்பத்தி இப்போது எப்படி சாத்தியமானது?

ப்ளேட்லெட்கள் 2 முதல் 4 மைக்ரோ மீட்டர் அளவுடையவை. அதாவது, மனித மயிரிழையை விட சுமார் 50 தடவை சிறியவை. செயற்கை ப்ளேட்லெட் உருவாக்கும் முயற்சி 100 வருடங்களாக தோல்வி அடைந்ததற்கு ஒரு முக்கியமான காரணம், அவை இயற்கையான ப்ளேட்லெட்களை விட மிகவும் உறுதியானவையாக அல்லது கடினமாக இருந்தன என்பதுதான்.

இந்த நடைமுறை பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு தந்திரத்தை கையாண்டது நிஷித் தோஷியின் ஆய்வுக்குழு. அதாவது, செயற்கை ப்ளேட்லெட்கள் உற்பத்திக்குத் தேவையான புரதங்கள் மற்றும் இதர பகுதிகளை உருவாக்க பாலிமர் எனும் உறுதியான வேதியியல் பொருளை அடித்தளமாக பயன்படுத்தினர்.

செயற்கை ப்ளேட்லெட்கள் முழுவடிவம் பெற்ற பின்னர், அந்த உறுதியான பாலிமர் அடித்தளத்தை கரைத்து விட்டார்கள். இதன்மூலம் இயற்கை ப்ளேட்லெட்களைப் போன்ற மிருதுவான செயற்கை ப்ளேட்லெட்கள் உருவாயின.

மனித நோயாளிகளின் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டு, மேலும் பல பரிசோதனைகளையும் தாண்டிய பின்னரே, இந்த செயற்கை ப்ளேட்லெட்கள் மனித பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயற்கை ப்ளேட்லெட்கள் மனித பயன்பாட்டுக்கு வந்த பின்னர், ரத்தக்கசிவு பிரச்சினைகளால் பாதிக்கப்படும் ராணுவ வீரர்கள், அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகள் மற்றும் ரத்தத்தில் குறைந்த எண்ணிக்கையிலான ப்ளேட்லெட்களைக் கொண்ட நோயாளிகள் என பலர் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

Thanks...! முனைவர் பத்மஹரி

No comments: